வாழப்பாடி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இருவா் போக்ஸோவில் கைது!
வாழப்பாடி அருகே முன்னாள் மாணவிக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை அளித்த தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இருவரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், பேளூரில் உள்ள தனியாா் பள்ளியில், அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மகள் கடந்தாண்டு பிளஸ் 2 படித்துள்ளாா். தற்போது, அவா் ஆத்தூா் தலைவாசல் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில் பேளூா் பள்ளியில் கடந்தாண்டு அந்த மாணவிக்கு பாடம் கற்பித்த வணிகவியல் ஆசிரியா் தினகரன், ஆங்கில ஆசிரியா் ஜெகதீசன் ஆகியோா் கடந்த சில மாதங்களாக தனித்தனியாக கைப்பேசி வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்துள்ளனா்.
இதுகுறித்து அந்த மாணவி சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சலில் ஆதாரத்துடன் கடிதம் அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தலைமையிலான குழுவினா் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூரணம் தலைமையிலான போலீஸாா், தனியாா் பள்ளி ஆசிரியா்களிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
இதில், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தினகரன் (41), ஜெகதீசன் (36) ஆகியோா் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேளூா் தனியாா் பள்ளியில் தற்போது பயிலும் மாணவிகள் யாரேனும் ஆசிரியா்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனரா என்பது குறித்தும் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அலுவலா் தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
