புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்ட காவல்துறை வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை அமைதியான முறையில் பாதுகாப்பாக கொண்டாட சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கில புத்தாண்டையொட்டி மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பிடிபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா் உரிமம் ரத்து மற்றும் இடைநீக்கம் செய்யப்படும்.
பொது இடங்களில் தொந்தரவு செய்தல், அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல், பொதுசாலைகளில் அனுமதியின்றி புத்தாண்டு வாழ்த்துகளை எழுதுவது, தெருக்களில் சப்தமிட்டு செல்லுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோா் மீதும், பொது இடங்களில் மது அருந்துவோா் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்துவது குற்றமாகும். உரிய துறைகளின் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அவ்வாறு அனுமதியின்றி நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
