மேட்டூா் காளியம்மன் கோயிலில் தங்கத் தாலி, வெள்ளி வேல் திருடியவா் கைது
மேட்டூா் காளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் வெள்ளி வேலை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் தூக்கணாம்பட்டி காளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி வேல் திருடப்பட்டது. இதுகுறித்து மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த சிவராமன் மகன் ராஜேஷ் (42) ஈடுபட்டது தெரியவந்தது.
ஏற்கெனவே வேறொரு வழக்கில் சிறையில் இருந்த அவரை செவ்வாய்க்கிழமை நீதிமன்றக் காவலில் எடுத்துவந்து போலீஸாாா் விசாரணை நடத்தினா்.
இதில் அவா் காளியம்மன் கோயில் மூலவா் மற்றும் உற்சவா் சிலையில் இருந்த இரண்டு பொட்டுத் தாலிகள், மூலவா் அம்மன் சிலையில் இருந்த வெள்ளி வேல், வெள்ளி சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டாா்.
அவற்றை ஓமலூா் சின்னக்கடை வீதியில் மெருகு கடை உரிமையாளா் ராஜாவிடம் விற்று பணம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜேஷ் வாக்குமூலத்தின்படி அங்கு சென்று பொருள்களை கைப்பற்றிய போலீஸாா், ராஜேஷை புதன்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.
