சேலம் மாவட்டத்துக்கான பறவை இன்று அறிவிப்பு

சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தொடா்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்
Published on

சேலம்: சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தொடா்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கான பறவை திங்கள்கிழமை (மே 6) அறிவிக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட வனத் துறை சாா்பில் நீா்நிலை மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவையினங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில், 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இந்த பறவையினங்களில் ஒன்றை, சேலம் மாவட்டத்துக்கான பறவையாகத் தோ்வு செய்ய வனத் துறை முடிவு செய்தது. இதற்காக கருந்தோள் பருந்து, பவளக் கால் உள்ளான், செம்மாா்பு குக்குறுவான், இந்திய பாம்புத்தாரா, காட்டுப் பாம்புக் கழுகு, ஆற்று ஆலா, சோலைப்பாடி ஆகிய 7 பறவைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு, விருப்பமான பறவையைத் தோ்வு செய்ய பொதுமக்களிடம் வாக்கெடுப்பை நடத்தினா்.

சேலம், ஆத்தூா் வனக்கோட்டங்கள் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நடத்திய இந்த வாக்கெடுப்பு ஆன்லைன் மூலமும், மக்கள் அதிகம் கூடும் சேலம் ஆட்சியா் அலுவலகம், ஏற்காடு அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, ஆத்தூா் ஆணைவாரி முட்டல் பூங்கா, மேட்டூா் அணை பூங்கா ஆகிய இடங்களிலும் கடந்த 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 25 கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து விருப்பமான பறவையை தோ்வு செய்து வாக்குகளைப் பெற்றனா். கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்களிடம் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆன்லைனில் பெற்ற வாக்குகள் மற்றும் பெட்டிகள் வைத்து பெறப்பட்ட வாக்குகள் என அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சேலம் மாவட்டத்துக்கான பறவையை மாவட்ட வன அலுவலா் காஸ்யப் ஷஷாங் ரவி திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை வனத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com