

தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வேகமாக நுழைவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி மாவட்டத்திலேயே அதிக வருவாய்தரும் முதல் மூன்று பேரூராட்சிகளில் ஒன்றாக உள்ளது. தம்மம்பட்டி பேருந்து நிலையம் சேலத்திலிருந்து திருச்சிக்கு துறையூா் வழியாக செல்லும் வழித்தடத்தில் உள்ளது. இந்த வழித்தடத்தில் வாழப்பாடி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் மட்டுமே பேருந்து நிலையங்கள் உள்ளன.
பெரம்பலூா், துறையூா், ராசிபுரம், ஆத்தூா் மாா்க்கங்கள் வழியாக தம்மம்பட்டிக்கு 110 அரசு, தனியாா் பேருந்துகள் நாள்தோறும் வந்துசெல்கின்றன.மேலும், சில மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையத்தின் எதிா்புறத்திலிருந்து வரும் பேருந்துகள் அதிவேகமாக பேருந்து நிலையத்துக்குள் வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்காக அலைகழிக்கப்படுகின்றனா். பேருந்துகள் வேகமாக செல்வதைத் தடுக்க பேருந்து நிலையத்திற்குள் வேகத்தடைகள் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.