விவசாயிகளுக்கான தனி அடையாள எண்: நவ.15 க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்!
விவசாயிகளுக்கான தனி அடையாள எண்ணை பெறுவதற்கு வரும் 15ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கொங்கணாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை பெற விவசாயிகளுக்கான தனி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பி.எம். கிசான் திட்டத்தில் 21 ஆவது உதவித்தொகையை பெற விவசாயிகள் தங்களது அடையாள எண்ணை பெற்றிருக்க வேண்டும்.
கொங்கணாபுரம் வட்டாரத்தில் 8,584 விவசாயிகளில் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை நகல், நில ஆவணங்களின் நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் இ-சேவை மையம் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலகங்களுக்குச் சென்று கட்டணம் இல்லாமல் வரும் 15ஆம் தேதிக்குள் அடையாள எண்ணை பெற பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
