பெரியாா் பல்கலை.யில் நாளை ‘தொல்காப்பியா் சுழலரங்கம்’
பெரியாா் பல்கலைக்கழகத்தில் ‘தொல்காப்பியா் சுழலரங்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்மொழி வளா்ச்சி பெறும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ‘தொல்காப்பியா் சுழலரங்கம் - வெள்ளி வட்டம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் ஒரு கருத்தரங்கை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆகஸ்டு 2025 முதல் நடத்திவருகிறது.
அந்த வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், பெரியாா் பல்கலைக்கழகமும் இணைந்து ‘தொல்காப்பியா் சுழலரங்கம் - மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் தொடா்நிகழ்வு - 4’ நவ. 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடத்த இருக்கின்றன.
இந்நிகழ்வை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஆய்வாளா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றி தொடங்கிவைக்க, பெரியாா் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியரும், துறைத் தலைவருமான பெ.மாதையன் ‘தொல்காப்பியம் சங்க இலக்கியம் இறைச்சி - உள்ளுறை ஒப்பீட்டாய்வு’ என்ற பொருண்மையில் சிறப்பு பொழிவாற்றுகிறாா்.
இதில், தமிழ்த் துறைப் பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள், முதுநிலை மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துக்கொள்ள உள்ளனா். இந்நிகழ்வு வலையொளி நேரலை மூலம் அனைத்துப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைகளும் இணையும் வகையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
