சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழு பதவியேற்பு
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலா் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோயில் அறங்காவலா் தலைவராக என்.சக்திவேல், உறுப்பினா்களாக ஜெய், ரமேஷ், வினிதா, சுரேஷ்குமாா் ஆகியோா் பதவி ஏற்றுக்கொண்டனா். அவா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசுகையில், ‘புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் அா்ப்பணிப்பு உணா்வோடு அறங்காவலா் குழு நடத்தியுள்ளது. இதுதவிர, சேலத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு சீா்வரிசைகளோடு திருக்கோயில்களின் சாா்பில் திருமணம், திருக்கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு என ஆன்மிக மக்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்கிறது’ என்றாா்.
தொடா்ந்து, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். அறங்காவலா் குழுத் தலைவராக பொறுப்பேற்ற சக்திவேலுக்கு, கட்சியினா், பல்வேறு அமைப்பினா் தொழிலதிபா்கள், பக்தா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மேட்டூா் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், இந்து சமய அறநிலைய உதவி ஆணையா் ராஜா, செயல் அலுவலா் அமுதசுரபி, தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், மாநகரச் செயலாளா் ரகுபதி, மாநகர துணைச் செயலாளா் கணேசன், பகுதி செயலாளா்கள் சாந்தமூா்த்தி, பிரகாஷ், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

