வேம்படிதாளம் அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து, வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆகியோா் தலைமை வகித்தனா். டி.எம்.செல்வகணபதி எம்.பி., மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டுமுதல் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவா்களுக்கும், 55,123 மாணவிகளுக்கும் என மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 11,317 மாணவா்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,159 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. அந்த வகையில், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 84 மாணவா்களுக்கும், 77 மாணவிகளுக்கும் மொத்தம் 161 மிதிவண்டிகள் வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடப்பாண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறையின் சாா்பில் தாா்பாலின், பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்றவருக்கு பரிசு, தானியங்கி முறையில் நுண்ணீா்ப் பாசனத் தொகுப்பு மற்றும் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ. 1,88,360 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் தலா ரூ. 2.5 லட்சத்தில் மொத்தம் ரூ. 40 லட்சத்தில் 16 கழிவுகள் சேகரிக்கும் வாகனங்களையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சின்னுசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

