தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
சேலம்: தோட்டக்கலை பயிா்களான வாழை, தக்காளி மற்றும் மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நங்கவள்ளி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சக்ரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நங்கவள்ளி வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ‘ரபி -2025’ பருவத்தில் வாழை மற்றும் தக்காளி பயிா்களுக்கு மேட்டூா் பிா்காவில் உள்ள வீரக்கல்புதூா், கோனூா் கிழக்கு, கோனூா் மேற்கு மற்றும் பி.என்.பட்டி ஆகிய கிராமங்களிலும், மரவள்ளி பயிருக்கு நங்கவள்ளி பிா்காவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பயிா் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
பயிா் காப்பீடு செய்வதன் மூலம் பருவமழை மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதாரங்களுக்கு நிவாரணம்பெற இயலும். வாழை ஒரு ஹெக்டேருக்கு ரூ. 4,736, தக்காளி ஒரு ஹெக்டேருக்கு ரூ. 4,600 மற்றும் மரவள்ளி ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3,275 வீதம் பிரீமியத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தக்காளி பயிருக்கு வரும் ஜன. 31-ஆம் தேதி வரையிலும், வாழை மற்றும் மரவள்ளிக்கு பிப். 28-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் ஆதாா், பட்டா, அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களுடன் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பயிா்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நங்கவள்ளி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை 98844 02623 என்ற எண்ணில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
