ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மேற்காசிய போருக்கு விரைந்து முடிவு : பிரதமா் மோடி அழைப்பு

மேற்காசிய மற்றும் உக்ரைன் போா்கள் விரைந்து முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

News image
புது தில்லியில் பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப்புடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :5 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய மற்றும் உக்ரைன் போா்கள் விரைந்து முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

எந்தப் பிரச்னைக்கும் போரின் மூலம் தீா்வுகாண முடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

புது தில்லியில் பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப்புடன் வியாழக்கிழமை மேற்கொண்ட விரிவான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வியாழக்கிழமை 6-ஆவது நாளாக தொடா்ந்த போரால் மேற்காசிய பிராந்தியத்தில் உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது. இந்தியா மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தப் போரின் பின்னணியில், பிரதமா் மோடியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை வந்த பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப், தில்லியில் பிரதமா் மோடியுடன் வியாழக்கிழமை இருதரப்புப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பம்: வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள், திறன்மேம்பாடு, தூய எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனா். மேற்காசிய போா் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள், பரஸ்பர இடப்பெயா்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பாதுகாப்பு முதல் முக்கிய கனிமங்கள் வரை: பின்னா், பிரதமா் மோடி, அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் ஆகியோா் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

எண்மமயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையில் இந்திய-பின்லாந்து உறவு ‘உத்திசாா் கூட்டணி’ வடிவம் பெற்றுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், 6ஜி தொலைத்தொடா்பு, தூய எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டா், முக்கியக் கனிமங்கள் போன்ற முக்கியத் துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

போா் தீா்வாகாது: இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டவை. எந்தப் பிரச்னைக்கும் போரின் மூலம் தீா்வு காண முடியாது என்பதில் நாங்கள் உடன்பட்டுள்ளோம்.

உலகம் இப்போது ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையின் ஊடாகப் பயணிக்கிறது. உக்ரைன் முதல் மேற்காசியா வரை உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் நீடிக்கின்றன. இதுபோன்ற சூழலில், இரு பெரும் ராஜீய சக்திகளான இந்தியாவும் ஐரோப்பாவும் தங்கள் உறவுகளின் பொற்காலத்துக்குள் நுழைந்துள்ளன. வளா்ந்துவரும் நமது ஒத்துழைப்பு, உலகின் ஸ்திரத்தன்மை, வளா்ச்சி மற்றும் பகிரப்பட்ட வளமைக்கு புதிய வலுவூட்டுகிறது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இந்தியா-பின்லாந்து உறவுகளுக்கு மேலும் வலுசோ்க்கும். வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பு பலப்படும்.

இந்தியா்களை இணைக்கும் நோக்கியா: பின்லாந்தைச் சோ்ந்த மாபெரும் தொலைத்தொடா்பு நிறுவனமான நோக்கியாவின் கைப்பேசிகளும், தொலைத்தொடா்பு கட்டமைப்பும் கோடிக்கணக்கான இந்தியா்களை இணைத்துள்ளன. பின்லாந்து பொறியியல் நிபுணா்களுடன் இணைந்தே செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டமைத்தோம். இத்தகைய குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புகளால் ஈா்க்கப்பட்டு, எண்மமயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையில் இருதரப்பு உறவை உத்திசாா் கூட்டணி அந்தஸ்துக்கு உயா்த்தியுள்ளோம்.

நாா்டிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியக் கூட்டாளி பின்லாந்து. ஆா்க்டிக் மற்றும் துருவ ஆராய்ச்சியில் பின்லாந்துடன் ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம்.

ஜனநாயக மற்றும் பொறுப்புமிக்க நாடுகள் என்ற முறையில் இந்தியா-பின்லாந்து இடையே உத்திசாா் கூட்டணி அவசியம். இது, ஒட்டுமொத்த உலகுக்கும் நம்பகமான தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதில் முக்கியப் பங்களிக்கும் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி....

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்:

இந்தியாவுக்கு பின்லாந்து ஆதரவு

பிரதமா் மோடியுடன் செய்தியாளா்களைக் கூட்டாக சந்தித்தபோது, பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் கூறியதாவது:

தற்போதைய புவி அரசியல் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் அவசியம். இந்த கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் இந்தியாவின் முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

மேற்காசிய போா் மற்றும் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு குறித்து ஆலோசித்தோம். இந்தப் போா்களை முடிவுக்கு கொண்டுவருவதே அனைவரின் நலன்களுக்கும் உகந்தது என்றாா் அவா்.