கொலை வழக்கில் பேன்சி கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறை
மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவரை வெட்டிக் கொலை செய்த பேன்சி கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஆத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரைச் சோ்ந்தவா் செல்வம் (55). லாரி ஓட்டுநா். இவரது மனைவி சத்யா. இரண்டு குழந்தைகள் உள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யா அதே பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவரின் பேன்சி கடைக்கு வேலைக்கு சென்றாா். அப்போது செல்வராஜுடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த செல்வம் மனைவி சத்யாவை கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 2023, செப் 20இல் விக்னேஷ் என்பவரின் கடையில் செல்வம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அரிவாளுடன் வந்த செல்வராஜ், செல்வத்தை வெட்டிக் கொலை செய்தாா். இந்த சம்பவம் குறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு ஆத்தூா் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரன் செல்வராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
ஆயுள் தண்டனை பெற்ற செல்வராஜுக்கு உஷாராணி, தாரா என, இரு மனைவிகள் உண்டு. இதில் முதல் மனைவி உஷாராணியை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவது மனைவி தாராவுடன் வசித்து வந்துள்ளாா். அவரையும் கடந்த 2017 இல் கொலை செய்துள்ளாா். இதுதொடா்பான வழக்கு, சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
