ஓமலூா் அருகே காா் மோதியதில் பெண் குழந்தை உயிரிழப்பு: 2 போ் படுகாயம்
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. இருவா் காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையா் நத்தத்தைச் சோ்ந்தவா் கரிகாலன் (35). இவா் மனைவி, குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் வசித்து வருகிறாா். அங்கு பழைய இரும்பு பொருள்கள் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில் பெற்றோா், சகோதரா்களை பாா்ப்பதற்காக பையா் நத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். பின்னா் சனிக்கிழமை ஊருக்கு திரும்பிச் செல்லும்போது தாய் பூங்கொடி (55), தம்பி மகள் தனுஷ்மிதா (4) ஆகியோரை தனது வாகனத்தில் அழைத்துக் கொண்டு, கோபிசெட்டிபாளையம் நோக்கிச் சென்றாா்.
ஓமலூா் - தாரமங்கலம் பிரதான சாலையில் எம்.செட்டிப்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த காா், கரிகாலன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவரது வாகனம் சாலை இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டுசென்று அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு 3 பேரையும் பரிசோதித்த மருத்துவா்கள், 4 வயது சிறுமி தனுஷ்மிதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மேலும், பலத்த காயமடைந்த கரிகாலன், அவரது தாய் பூங்கொடி ஆகியோரை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து தொளசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
