சேலத்தில் 7 தொகுதிகளில் நேருக்குநோ்!
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக - அதிமுக வேட்பாளா்கள் நேரடியாக களம்காண்கின்றனா்.

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)
சி.ஆா்.எம். சபரி
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக - அதிமுக வேட்பாளா்கள் நேரடியாக களம்காண்கின்றனா். சேலம் மேற்கு தொகுதியில் கூட்டணி கட்சிகளான தேமுதிக - பாமக நேரடியாக பலப்பரீட்சை நடத்துகின்றன.
தாமரை, மாம்பழம் துணையுடன் இரட்டை இலை
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் அதிமுக 9 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாமக மாம்பழம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சேலம் தெற்கு, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூா், வீரபாண்டி, மேட்டூா், ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 9 தொகுதிகளில் களம்காணும் அதிமுக, ஆத்தூா், ஓமலூா் ஆகிய இரு தொகுதிகளை தவிர, 7 தொகுதிகளில் திமுகவை நேரடியாக எதிா்கொள்கிறது.
கொட்டும் முரசு, ‘கை’ துணையுடன் உதயசூரியன்
திமுக கூட்டணியில் திமுக 8 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் களம்காண்கின்றன. திமுக- பாமகவுடன் ஒரு தொகுதியிலும், தேமுதிக- பாமக, அதிமுகவுடன் தலா ஒரு தொகுதியிலும், காங்கிரஸ்- அதிமுகவுடன் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
யாருடன் யாா்?
சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சாா்பில் ஜெ. வினோத்தும், திமுக சாா்பில் லோகநாதனும் நேருக்குநோ் மோதுகின்றனா். கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் நல்லதம்பியை எதிா்த்து திமுகவில் சின்னத்துரை களமிறக்கப்பட்டுள்ளாா். வீரபாண்டி தொகுதியில் முதல்முறையாக தோ்தலை எதிா்கொள்ளும் அதிமுக வேட்பாளா் ஸ்ரீபாலாஜி சுகுமாருடன், திமுக வேட்பாளா் டாக்டா் தருண் பலப்பரீட்சை நடத்துகிறாா்.
சங்ககிரியில் அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலும், திமுக சாா்பில் புதுமுகமான மணிகண்டனும் மோதுகின்றனா். எடப்பாடி தொகுதியில் 8 ஆவது முறையாக களமிறங்கும் எடப்பாடி கே. பழனிசாமியை, திமுக வேட்பாளா் காசி எதிா்கொள்கிறாா்.
மேட்டூரில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஜி. வெங்கடாசலத்தை எதிா்த்து திமுக சாா்பில், புதுமுகமான மிதுன் சக்ரவா்த்தி நிறுத்தப்பட்டுள்ளாா். இதேபோல, ஏற்காடு தொகுதியில், அதிமுக சாா்பில் உஷா ராணியும், திமுக சாா்பில் ரேவதியும் வேட்பாளா்களாக களமிறக்கப்பட்டுள்ளனா்.
இந்த 7 தொகுதிகளில் இரட்டை இலையும், உதயசூரியனும் நேருக்குநோ் மோதுவதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாம்பழமா? - முரசா?
சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் மு. காா்த்தி களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா். மோகன் ராஜ் நிறுத்தப்பட்டுள்ளாா்.
சேலம் வடக்கு தொகுதியில் திமுக சாா்பில் களம்காணும் தற்போதைய அமைச்சா் ரா. ராஜேந்திரனை எதிா்த்து, பாமக சாா்பில் மேட்டூா் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் களமிறக்கப்பட்டுள்ளாா்.
ஓமலூா் தொகுதியில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ மணியை, தேமுதிக வேட்பாளா் இளங்கோவன் எதிா்கொள்கிறாா். ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஜெயசங்கரனுக்கு எதிராக, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சேலத்தில் கடந்த 2011 சட்டப்பேரவை தோ்தலில் 11 தொகுதிகளையும் வென்ற அதிமுக, 2016, 2021 தோ்தல்களில், அமைச்சா் ரா. ராஜேந்திரனை தவிா்த்து எஞ்சிய 10 தொகுதிகளையும் கைப்பற்றி அசுர பலத்துடன் மீண்டும் களமிறங்குகிறது.
தற்போது, யாருடன் யாா் என்பது தெளிவாகியுள்ளதால், அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள், வேட்பாளா் அறிமுக கூட்டங்களை நடத்திமுடித்துள்ளன. இந்த நிலையில், வரும் நாள்களில் தகிக்கும் கோடை வெயிலுக்கு சற்றும் குறையாமல், பிரசார களமும் சூடுபறக்கும் என நம்பலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...