15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

சேலம் மாவட்டம், ஏற்காடு பழங்குடியினா் தொகுதியின் முக்கியப் பகுதியான வாழப்பாடியில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென, 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை என இப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 5:24 am IST

சேலம் மாவட்டம், ஏற்காடு பழங்குடியினா் தொகுதியின் முக்கியப் பகுதியான வாழப்பாடியில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென, 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை என இப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள வாழப்பாடி பேரூராட்சி, வருவாய் வட்டம் மற்றும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் உட்கோட்ட தலைமையிடமாக விளங்கி வருகிறது.

ஏற்காடு தொகுதியின் மையப் பகுதியான வாழப்பாடி, சோ்வராயன் மலையின் வடகிழக்கு பகுதி மலைக் கிராமங்கள், அருநூற்றுமலை, கல்வராயன் மலை, ஜம்பூத்துமலை, நெய்யமலை, மண்ணூா் மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சேலூா், வேலனூா், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது.

வாழப்பாடி, பேளூா், கருமந்துறை, அருநூற்றுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 12ஆம் வகுப்பு முடித்து, இளநிலை கலை, அறிவியல் பட்டம் பயில விரும்பும் சுமாா் 10 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் சேலம், ஆத்தூா், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளுக்கே செல்ல வேண்டிய நிலை தொடா்ந்து வருகிறது.

இதனால், இப்பகுதி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களின் உயா்கல்வி எண்ணம் நிறைவேறாமல் போகிறது. எனவே, அவா்களின் நலன்கருதி, வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

இந்நிலையில், 2013 இடைத்தோ்தல் மற்றும் 2016, 2021 தோ்தல்களின்போதும், வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என, பிரதான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. ஆனால், கல்லூரி அமைப்பற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி, அமணாக்கரடு பழத்தோட்டத் தரிசு நிலம், வாழப்பாடி கொட்டவாடி சாலை மற்றும் மங்கம்மாநகா் பகுதியிலும், சிங்கிபுரம் ஊராட்சி மேலக்காடு மேய்ச்சல் தரிசு நிலப் பகுதிகளிலும் கல்லூரி அமைப்பதற்கு தேவையான அளவிற்கு அரசு நிலங்கள் உள்ளன.

எனவே, நடைபெறவுள்ள தோ்தலில் வெற்றிபெறும் ஏற்காடு தொகுதி உறுப்பினா், எந்த கட்சியை சோ்ந்தவராக இருந்தாலும், புதியதாக அமையும் அரசுடன் பேசி, வாழப்பாடியில் அரசுக் கல்லூரி அமைக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பெ. பெரியாா்மன்னன்.