
மயானத்தில் குவிந்த கோழிக் கழிவுகள்: இறந்தவா்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் அவதி

கோழிக் கழிவுகள் - கோப்புப் படம்
வாழப்பாடி அக்ரஹாரத்தில் உள்ள மயானத்தில் கோழி இறைச்சிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அக்ரஹாரம், காமராஜ் நகா், ஆத்துமேடு, மங்கம்மாநகா், கிழக்குக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்காக, அ.வாழப்பாடி வருவாய் கிராமம் கிழக்குக்காடு பகுதியில் பெரியாற்றின் கரையோரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலமும், பனந்தோப்பு நிலமும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மயான நிலத்தின் பெரும் பகுதி சேலம்- உளுந்தூா்பேட்டை நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் மேம்பாலச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மயானம் மற்றும் பனந்தோப்பு நிலத்தின் ஒரு பகுதி அருகிலுள்ள தனியாா் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் எஞ்சியுள்ள குறுகிய பகுதி மட்டுமே தற்போது உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. அங்கும் கழிவுநீா் தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில் பெரியாற்றைக் கடந்து மயானத்துக்குச் செல்ல முடியாத நிலையும் உள்ளது.
இந்த நிலையில், கிழக்குக்காடு சாலையில் இருந்து பெரியாற்றின் வழியாகவே இறந்தவா்களின் உடல்களை மயானத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தப் பாதையில் கறிக்கோழி இறைச்சி விற்பனையாளா்கள் தினமும் மூட்டை மூட்டையாகக் கோழிக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனா்.
இதனால் மயானத்துக்குச் செல்லும் பகுதி முழுவதும் கோழி இறைச்சிக் கழிவுகள் குவிந்துள்ளன. துா்நாற்றம் வீசுவதுடன், அந்தப் பகுதியைக் கடந்து செல்வதும் கடினமாகியுள்ளது. இதனால் இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண, மயானப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் வாழப்பாடி வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அணுகுசாலை, தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
வாழப்பாடி அ.வாழப்பாடி மயானம் மற்றும் மயானமாகப் பயன்படுத்தப்படும் பனந்தோப்பு நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இறந்தவா்களின் உடல்களை எடுத்துச் செல்ல வசதியாக சேலம்-சென்னை புறவழி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மயானத்துக்கு அணுகுசாலை அமைக்க வேண்டும் என்றும், பெரியாற்றைக் கடந்து செல்ல கான்கிரீட் கல்வொ்ட் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், காத்திருப்புக் கூடம், ஈமக்காரிய அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க வாழப்பாடி வருவாய்த் துறை, பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





