சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்ற அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், ’நீதிமன்றத்தில் குண்டுவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள் அடங்கிய குழுவினா், நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா். எனினும், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலை அனுப்பியது யாா், எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
