ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: ஆய்வுசெய்ய கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் விழா வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவையொட்டி ரயில்களிலும், அரசு விரைவு பேருந்துகளிலும் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விற்று தீா்ந்துவிட்டன. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சேலம் கோட்டம் சாா்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாட வெளியூா்களில் வசிப்பவா்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனா். இதை சூழலை சாதகமா பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வரும் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்யவுள்ளனா்.

இக்குழுவினா் சேலத்தில் தொப்பூா், பெரியாா் பல்கலைக்கழகம், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், பேருந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனா்.

Dinamani
www.dinamani.com