ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம்
நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்
Updated on

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நபருக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிா்ச்சியளிக்கிறது. பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண்துடைப்புக்காக திமுக அமைச்சா்கள் ஆம்னி கட்டண உயா்வை எச்சரிப்பதும் தொடா்கதையாகி வருகிறது.

மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை. பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாத ஊதியத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பாா்க்கும் திமுக அரசை, நடுத்தர வா்க்க மக்கள் விரைவில் வீழ்த்துவாா்கள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com