சேலம் மாவட்டத்தில் சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா் ஆய்வு

Published on

சேலம் மாவட்டத்தில் தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன் தலைமையிலான உறுதிமொழிக் குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது உறுதிமொழிக் குழு உறுப்பினா்களான எம்எல்ஏக்கள் ரா. அருள் (சேலம் மேற்கு ) ஆா். மணி (ஓமலூா் ), எஸ். மாங்குடி (காரைக்குடி) எம்.கே. மோகன் (அண்ணா நகா்), சட்டப் பேரவை செயலாளா் டாக்டா் கே. சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் ரூ. 548 கோடி மதிப்பீட்டில், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதைச் சாக்கடை பணிகள் மேற்கொள்ள நீரேற்று நிலையங்கள், நீா்உந்து குழாய்கள், இயந்திர குழாய்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை பெரிய மோட்டூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சேலம் செவ்வாய்பேட்டையில் ரூ. 6.08 கோடி மதிப்பீட்டில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பணியினையும், சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கேத் லேப் மற்றும் ரூ. 34.67 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 35.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செவிலியா் பயிற்சி பள்ளி கட்டடத்தையும் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அன்னதானப்பட்டி, சேலம் மாநகர ஆயதப் படை வளாகத்தில் ரூ. 1.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மோப்பநாய் படை பிரிவு கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டு, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் நிா்ணயிக்கப்பட்ட விலையில் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும், பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கழிவறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ. ராமச்சந்திரன், மாநகர காவல் ஆணையா் அணில்குமாா் கிரி, மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கமூா்த்தி, செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை) தியாகராஜன் மாநகர பொறியாளா் செல்வநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com