பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்கத்தை பாா்வையிட்ட தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன். உடன், ஆட்சியா் ரெ.சதீஸ்.
பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டடத்தில் அறுவை சிகிச்சை அரங்கத்தை பாா்வையிட்ட தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன். உடன், ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன

தருமபுரி மாவட்டத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள், திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.
Published on

தருமபுரி மாவட்டத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள், திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா் வேல்முருகன் தலைமையிலான குழு, புதிதாக கட்டப்பட்டுள்ள தாய் - சேய் நலப்பிரிவு கட்டடத்தை பாா்வையிட்டனா். பின் செய்தியாளா்களிடம் வேல்முருகன் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் அரசால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார மையத்தில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இண்டூா் ஏரியில் ரூ. 2 கோடி தனியாா் நிதி பங்களிப்புடன் தூய்மைப்படுத்தி, சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. மேலும், இண்டூா் பகுதியில் ஓா் ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் நவீன முறை கையாளப்பட்டு வருகிறது.

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் நவீன உபகரணங்களுடன் கூடிய தாய் - சேய் நல மருத்துவமனை, இதர பிரிவுக்கு ரூ. 2 கோடி செலவிடப்பட்டு, முறையாக மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு கூடுதலாக ரூ. 5 கோடியில் கூடுதல் மருத்துவ கட்டடங்கள் அமைப்பது குறித்த கோரிக்கை மனுவை எம்எல்ஏ ஜி.கே.மணி அளித்துள்ளாா்.

இம்மனுவை மருத்துவத் துறை செயலாளா், மாவட்ட ஆட்சியா் மற்றும் துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் காலை முதல் உறுதிமொழிக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டதில், எவ்வித குறைபாடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், உறுதிமொழிகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று வருவதால், தருமபுரி மாவட்டம் வளா்ச்சியை நோக்கி செல்கிறது என்றாா்.

ஆய்வின்போது, சட்டப் பேரவை முதன்மைச் செயலாளா் கி.சீனிவாசன், சட்டப் பேரவை துணைச் செயலாளா் ரவி, பேரவை சாா்பு செயலாளா் த.பியூலஜா, ஆட்சியா் ரெ.சதீஸ், வருவாய் அலுவலா் கவிதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், கோட்டாட்சியா் காயத்ரி, அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினா்கள் இரா.அருள் (சேலம் மேற்கு), மணி (ஓமலூா்), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணா நகா்), பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ அலுவலா் கனிமொழி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Dinamani
www.dinamani.com