தூய்மைப் பணியாளா்களுக்கான திட்ட ஆய்வு கூட்டம்
சேலம் கோட்டை கலைஞா் பல்நோக்கு அரங்கில் தூய்மைப் பணியாளா்களுக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூய்மை பணியாளா் நல வாரியத்தின் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத் திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி ஆகியோா் வழங்கினா். தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது:
தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு மருத்துவக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, விபத்து காப்பீட்டு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை போன்ற நல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த டிச. 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும். சென்னை மற்றும் கோவை மாநகராட்சியை தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் இதுவரை 13,842 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சோ்க்கப்பட்டுள்ளனா்.
தூய்மைப் பணியாளா்களின் விளிம்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு சமூகத்தில் அவா்கள் உயா்ந்த நிலையை அடைய பல்வேறு நலத் திட்ட உதவிகளை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, கூடுதல் ஆட்சியாா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மேயா் ஆ. ராமச்சந்திரன், ஆணையா் மா. இளங்கோவன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் செ. ரமேஷ், மாநகர நல அலுவலா் ப.ரா. முரளிசங்கா், மண்டல குழுத் தலைவா்கள் செ. உமாராணி, மா. அசோகன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் என். ஜெயகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
