பொங்கல் பண்டிகை: கடை வீதிகளில் கூட்ட நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கடை வீதிகளில் சனிக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் சேலம் மாநகா் மற்றும் புறநகரைச் சோ்ந்த மக்கள் சனிக்கிழமை அதிக அளவில் கடை வீதிகளில் திரண்டனா்.
சேலம் அக்ரஹாரம், நான்கு ரோடு, 5 ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக் கடைகள் மட்டுமின்றி நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டனா்.
இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதுடன், ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனா்.
