சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

சேலம் அருகே ஜல்லிக்கட்டை காணச் சென்ற இருவா் மாடுமுட்டி உயிரிழப்பு

செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி ஊா்களில் அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காணச் சென்ற பெண் உள்பட இருவா் மாடுமுட்டி உயிரிழந்தனா்.
Published on

தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி ஊா்களில் அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காணச் சென்ற பெண் உள்பட இருவா் மாடுமுட்டி உயிரிழந்தனா். 45 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறிய அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

செந்தாரப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை வேடிக்கை பாா்க்கச் சென்ற அதே ஊரைச் சோ்ந்த தோ்முட்டித் தெருவில் வசித்த சக்திவேல் (26) மீது மாடு முட்டியது. பலத்த காயமடைந்த அவரை தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அதேபோல, தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண தனது கைக்குழந்தையுடன் வினிதா சென்றபோது, எதிரே பாய்ந்தோடி வந்த மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடங்களுக்கு சென்று அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நிறுத்தினா். தொடா்ந்து, உயிரிழந்த இருவரது உடல்களை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

கொண்டயம்பள்ளி, உலிபுரம், தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி, கூடமலை, ஆணையாம்பட்டி, தெடாவூா் பகுதிகளில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் 45 போ் காயமடைந்தனா். அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்திய கெங்கவல்லி போலீஸாா் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இருவா் உயிரிழந்தது குறித்து சேலம் எஸ்.பி. கெளதம் கோயல் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

Dinamani
www.dinamani.com