சேலம் கோட்டத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊா் திரும்ப ஏதுவாக, சேலம் கோட்டத்தில் 18, 19 ஆகிய தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெ.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊா் திரும்ப ஏதுவாக, சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் 18, 19 ஆகிய தேதிகளில் 500 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
