சாலையோரம் தூங்கிய தொழிலாளி வாகனம் மோதியதில் உயிரிழப்பு
சேலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். சேலம் ஜான்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், கடை வீதி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து அங்குள்ள சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியது. இதில், அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த நகர காவல் நிலைய போலீஸாா், லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
