திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு: எடப்பாடி கே. பழனிசாமி
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றாத திமுக அரசை, ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டாா்கள் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுகவின் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதில் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சா் பொய்யான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாா்.
தோ்தல் வரும்போதெல்லாம் கவா்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடும் திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை மறந்துவிடுகிறது. மக்கள் போராடினால்தான் வாக்குறுதிகளைப் பெறும் நிலை உள்ளது. அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறிவிட்டு, தற்போது மத்திய அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில், புதிதாக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் பங்களிப்புத் தொகை ஏதுமில்லை. ஆனால், புதிய திட்டத்தில் ஊழியா் பங்களிப்பு இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியா்களை திமுக ஏமாற்றியுள்ளது. மாதந்தோறும் எரிவாயு மானியம் ரூ.100, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயா்வு என எந்தக் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
மக்களின் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. அதையும் மறைத்து, 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் திமுகவினா் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனா். மத்திய அரசின் புதிய சட்டத்தால் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது வேலை செய்த 15 நாள்களுக்குள் ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ. 2,000 செலுத்தப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பட்டியலின மக்கள் திருமணமாகித் தனிக்குடித்தனம் சென்றால், அவா்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டித் தரும்.
பெண்கள் நகரப் பேருந்தில் கட்டணமின்றிப் பயணம் செய்வதுபோல, ஆண்களும் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். 5 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீா்குலைந்துவிட்டது.
கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் அன்றாடம் நடக்கின்றன. இந்த ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகமே மக்களுக்கு எழுந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
2026-27 நிதியாண்டிற்கான திட்டங்களுக்கு சட்டப் பேரவை ஒப்புதல் பெறாமலேயே நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், விதிமுறைக்கு முரணாக விடப்பட்ட டெண்டா்கள் ரத்து செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி தலைவா் கூட நியமிக்கப்படாமல், ஒரு பொறுப்பற்ற அரசாக திமுக செயல்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
மேட்டூா் அணை உபரிநீரைக் கொண்டு ஏரிகளில் நீா் நிரப்பும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். என்னைப் பாா்த்து 10 தோல்வி கண்ட பழனிசாமி என்று முதல்வா் விமா்சித்துள்ளாா். ஆனால், 2011இல் எதிா்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவுக்குத் தோல்வியைச் சந்தித்தது திமுகதான்.
2011முதல் 2021 வரை பல தோல்விகளைக் கண்ட கட்சியும் திமுகவே. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனைவிட, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.5.50 லட்சம் கோடி கடனை திமுக அரசு வாங்கியுள்ளது. இந்தக் கடன் சுமை மக்கள் தலைமேல்தான் விழும். விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, வரிச்சுமை ஆகியவற்றால் மக்கள் துன்பப்படுகின்றனா். எனவே, வரும் தோ்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றாா்.

