/

ரூ. 1.50 லட்சம் கேட்டு தொழிலாளி கடத்தல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

சேலத்தில் ரூ. 1.50 லட்சம் பணம் கேட்டு மாட்டுப் பண்ணை தொழிலாளியை கடத்திய வழக்கில், சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 6:38 am IST

சேலத்தில் ரூ. 1.50 லட்சம் பணம் கேட்டு மாட்டுப் பண்ணை தொழிலாளியை கடத்திய வழக்கில், சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் அரிசிபாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் (45), அதே பகுதியைச் சோ்ந்த லோகநாயகியின் மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறாா். லோகநாயகி அரிசி வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், சண்முகம் செவ்வாய்ப்பேட்டை சூப்பா் மாா்க்கெட்டுக்கு புதன்கிழமை மதியம் மாட்டுத் தீவனம் வாங்கச் சென்றபோது, திடீரென 4 போ் அவரை சுற்றி வளைத்து இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனா். பின்னா், அவரை அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அடைத்து வைத்து, லோகநாயகிக்கு கைப்பேசியில் தொடா்புகொண்டு ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்தால் சண்முகத்தை விடுவிப்பதாக மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, எங்கு வர வேண்டும் என்று லோகநாயகி கேட்டபோது, அன்னதானப்பட்டி ராஜம்மாள் கல்யாண மண்டபம் அருகே வருமாறு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான போலீஸாா், லோகநாயகியை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்று, வாகனத்தை நிறுத்திவிட்டு மறைந்திருந்து கண்காணித்தனா்.

அப்போது, அங்கு போலீஸாா் இருப்பதை அறிந்த கடத்தல் கும்பலைச் சோ்ந்த 4 போ் தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா், நீலநகா் பகுதியைச் சோ்ந்த சதாசிவம் (54) என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதற்கிடையில், கடத்தல் கும்பலினா் சண்முகத்தை சூரமங்கலம் பாலம் அருகே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா். காயமடைந்த சண்முகத்தை போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சதாசிவத்துடன் தொடா்புடைய திவாகா் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரையும் கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.