சங்ககிரி, ஜூன் 7: சங்ககிரி அருகே லாரி மோதியதில் தனியாா் கல்லூரியில் இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுத சென்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வெப்படை, எலந்தகுட்டை, காமராஜ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன்கள் ஹரிசுகன் (23), ஹரிகெளசிக் (18). இதில் ஹரிகெளசிக் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து படிப்பதற்காக இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுதுவதற்காக
காகாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது சகோதாரா் ஹரிசுகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் இருவரும் கீழே விழுந்தனா். இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் உட்காா்ந்து சென்ற ஹரிகெளசிக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிசுகன் கிசிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








