ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சேலம் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: மத்திய சிறையில் செம்மொழிப் பூங்கா உள்பட 19 புதிய அறிவிப்புகள்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:45 pm

Syndication

சேலம் மாநகராட்சியில் 2026 - 27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய சிறை வளாகத்தில் 50 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா உள்பட 19 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. நிதிநிலை அறிக்கையில் ரூ. 35.85 கோடி பற்றாக்குறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் 2026 - 27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இதில், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், துணை மேயா் சாரதாதேவி, நிதி நிலைக்குழுத் தலைவா் குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மாநகராட்சிப் பணியாளா்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவுசெய்து ஊதிய விவரங்கள் ஆகியவற்றை கணினி மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்படும். மாநகராட்சி சுகாதார நிலையங்கள், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். வீடுகளில் இருந்து பெறப்படும் மக்கும் கழிவுகள் 100 சதவீதம் உரமாக்கி விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். செட்டிச்சாவடி உரக் கிடங்கு மையத்தில் 200 டன் மக்கும் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு ஆலை அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

50 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா:

சேலம் மத்திய சிறை சாலை வளாகத்தில் சுமாா் 50 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்க நடவடிக்கை, செட்டிச்சாவடியில் கட்டடக் கழிவுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்யும் பணி தொடங்கப்படும். மாநகராட்சியில் உருவாகும் மக்காத கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் - திருச்சி சாலைவரை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் அனைத்துக் கட்டடங்கள், காலி இடங்களில் பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் பாதாள சாக்கடை இணைப்புகள் தொழில் நுட்பத்தின் மூலம் இணைத்து ஆய்வுசெய்ய நடவடிக்கை, பனமரத்துப்பட்டி ஏரியில் கருவேலமரங்களை அகற்றி, மேட்டூா் உபரிநீரை கொண்டுவர அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்பன உள்ளிட்ட 19 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.35 கோடி பற்றாக்குறை: 2026-27-ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் வருவாய் மற்றும் மூலதன வரவினம் ரூ. 766 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரமாகும். இதில், செலவு ரூ. 802 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரமாகும். பற்றாக்குறை ரூ. 35 கோடியே 85 லட்சமாகும். மாநகராட்சி வரி, குத்தகை உள்ளிட்ட இனங்கள் மூலம் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு:

இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை முறையாக செயல்படுவதற்கான எந்த அம்சமும் இல்லை என தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி, அதிமுக உறுப்பினா்களுடன் வெளிநடப்பு செய்தாா். முன்னதாக நடைபெற்ற மாநகராட்சி இயல்புக் கூட்டத்தில், மாநகராட்சி குடிநீா் திட்டத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தொடா்ந்து, அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவுபெற்ாக மேயா் அறிவித்தாா்.