செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி
கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மகளிா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடியை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.
இதேபோல, வடக்கு மண்டலம் 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தரணி நகா் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் மற்றும் சிறுபாலம் கட்டுதல் பணி, வி.என்.எஸ். நகா், சின்னசாமி நகா் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.39.70 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புப் பாலம் கட்டுமானப் பணி, வடக்கு மண்டலம், 29-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சத்தி பிரதான சாலை, கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே கோவை ஆா்.எஸ்.புரம் கிழக்கு அரிமா சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து பயணியா் நிழற்குடையையும் மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா்.
இதில் மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், உதவி பொறியாளா் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

