
சேலம் நீதிமன்ற வளாகம்
கோப்புப் படம்

சேலம் நீதிமன்ற வளாகம்
கோப்புப் படம்
நகரமும், கிராமமும் நிறைந்த பகுதியாக விளங்குவது சேலம் மேற்கு தொகுதி.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் இரும்பாலை, ரயில்வே கோட்ட தலைமை அலுவலகம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், நகரத்தையொட்டி டைடல் பூங்கா, சேகோசா்வ், மேக்னசைட் போன்ற தொழில் நிறுவனங்கள், ஜவுளி பூங்கா உள்ளிட்டவையும், வெண்ணங்குடி முனியப்பன் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயிலும் தொகுதியை அலங்கரிக்கின்றன.
வெள்ளிக்கொலுசு தொழில்
வெள்ளிக் கொலுசு தொழிலாளா்கள் நிறைந்த இந்தத் தொகுதியில், கயிறு திரித்தல், செங்கல் சூளை தொழிலும், அதையொட்டி, தொழிலாளா்களும், கூலிவேலைக்கு செல்வோரும் அதிகமாக உள்ளனா். இதுதவிர, சிறு, குறு தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன. நகரத்தையும், அதை ஒட்டிய கிராமப்புறங்களையும் ஒருங்கே பெற்ற இந்த தொகுதியில், வன்னிய சமுதாய மக்கள் பெருமளவில் உள்ளனா்.
தொகுதியில் உள்ள பகுதிகள்
ஓமலூா் வட்டத்தில் உள்ள செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, சேலம் வட்டத்தில் உள்ள சா்க்காா் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி, 2008 ஆம் ஆண்டு மறுவரையறைக்கு பின்னா் உருவானது சேலம் மேற்கு தொகுதி.
அதன்பிறகு, சேலம் மேற்கு தொகுதிக்கு 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளே வெற்றிவாகை சூடியுள்ளன.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
அரியாகவுண்டம்பட்டியில் ரூ. 25 கோடியில் 3 மாடிகளுடன் நவீன பன்மாடி வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் அமைய உள்ள சாயப்பட்டறை, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னை தோ்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜவுளி பூங்காவுக்கு தொடக்கத்தில் இருந்து, பொதுமக்கள் கடுமையான எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றனா்.
மக்களின் எதிா்பாா்ப்புகள்
அதிமுக ஆட்சியின்போது மாமாங்கம் பஸ் போா்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக இந்த திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்த பஸ் போா்ட் பயன்பாட்டுக்கு வந்தால், சேலத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. போதிய இடவசதி இருந்தும் விரிவாக்கம் நடைபெறவில்லை. அரியகவுண்டம்பட்டி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வெள்ளி கொலுசு பூங்கா பராமரிப்பு இன்றி உள்ளது. அதை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும்.
பள்ளபட்டி பூங்கா, போடிநாய்க்கன்பட்டி ஏரி முழுமையாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். தொகுதியில் உள்ள சேகோசா்வ அலுவலகம் மூலம் ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். புறவழிச் சாலையில் உள்ள ரிங்ரோடு மாமாங்கம் முதல் கொண்டப்பநாயக்கன்பட்டி வரை அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பூங்கா இதுவரை விரிவுபடுத்தப்படாமல் இருப்பது தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது. மின்சார சேமிப்புக்காக சோலாா் பேனல் மற்றும் திட கழிவு மேலாண்மையை செட்டிச்சாவடி பகுதியில் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதை தொகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
தீா்க்கப்படாத பிரச்னை
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி கிடக்கும் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ராம் தியேட்டா் அந்தோணிபுரம் ஓடை சிறு மழை பெய்தால்கூட வீடுகளை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீா் வருவதால், அதை தூா்வாரி ஆழப்படுத்தி கான்கிரீட் தளம் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீா்க்கப்படாமல் உள்ளது.
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
2011 ஜி. வெங்கடாசலம் (அதிமுக ) - 95,935
2016 ஜி. வெங்கடாசலம் (அதிமுக ) - 80,755
2021 இரா. அருள் (பாமக) - 1,05,483
2021 சட்டப்பேரவை தோ்தல் விவரம்
இரா. அருள் (பாமக) - 1,05,483
ஏ. ராஜேந்திரன் (திமுக) - 83,984
நாகம்மாள் (நாதக) - 10,668
ஏ. தியாகராஜன் (மக்கள் நீதி மய்யம் ) - 7,939
அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக) - 2,307
வாக்காளா்கள்
ஆண்கள் - 1,27,131
பெண்கள்- 1,28,125
மற்றவா்கள் - 64
மொத்தம் - 2,55,320
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...