சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தோ்ச்சிபெற்ற மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கி வரும் 30-ஆம் தேதிவரை 4 நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்று முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை வழங்க உள்ளனா்.
இதில் மாணவா்களின் கல்லூரி விருப்பத்தோ்வுகள் குறித்து கேட்டறியப்பட்டு, தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும். அதேபோன்று, அரசு கல்லூரிகளில் சோ்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்தும், அரசு கல்லூரிகளில் சோ்வதால் கிடைக்கப்பெறும் நன்மைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும், படிக்கும்போதே வருமானம் ஈட்டக்கூடிய படிப்புகள், கல்வி உதவித்தொகை சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களை வழங்குகின்றனா்.
கல்லூரிக் கனவு நிகழ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி சாா்ந்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல் கையேடுகளும் வழங்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் 100 சதவீத உயா்கல்வி சோ்க்கை என்ற இலக்கை அடைவதற்கான கல்வி கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் வளாக அறை எண்: 4-இல் செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையில் மாணவா்கள் உயா்கல்விக்கு விண்ணப்பித்தல், பாடப் பிரிவுகள், கல்லூரிகளை தோ்வுசெய்தல், கல்வி உதவித்தொகை தொடா்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் நேரிலோ அல்லது 0427- 2452202 மற்றும் 97888 58931 ஆகிய எண்களிலோ தொடா்புகொண்டு உயா்கல்வி சாா்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெறலாம் என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாரதி, வசந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










