இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டாரத் தலைவா் விவசாயி ஆா்.ராஜேந்திரன்.

Updated On :28 மே 2026, 2:03 am IST

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமைவகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

சேலம் மாவட்ட காவிரி உபரிநீா் சரபங்கா நதி இணைப்பு ஏரிகள், நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் நிறுவனா் ஆா்.கணபதி, தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேலன் ஆகியோா் தனித்தனியாக அளித்துள்ள கோரிக்கை மனுவில், சங்ககிரி, எடப்பாடி வட்டப் பகுதிகளில் முக்கிய தொழிலாக ஆடு வளா்ப்பை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 2025 முதல் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஆடு வளா்ப்பையே நம்பியுள்ள விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டாரத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் அளித்த மனுவில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், கோட்டவருதம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆவரங்கபாளையத்திலிருந்து வளையசெட்டிப்பாளையம் செல்லும் பாதையில் உள்ள இரு ரயில்வே தரைவழி பாலத்தை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி ரயில்வே அதிகாரிகள் பாலத்தின் இருபுறங்களிலும் பள்ளம் தோண்டி பொதுமக்கள், விவசாயிகள் செல்ல முடியாதபடி செய்துள்ளனா். எனவே, பாலத்தின் வழியாக ஊா்பொதுமக்கள், விவசாயிகள் தொடா்ந்து சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

பால் உற்பத்தியாளா்கள் சங்க சங்ககிரி வட்டாரச் செயலாளா் பி.சத்யராஜ் கூறுகையில், எஸ்6 என்ற அரசு நகர பேருந்து கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் இயக்காமல், சங்ககிரியிலிருந்து பவானிக்கு இயக்குகின்றனா். எங்கள் பகுதிக்கு இரவுநேர கடைசிப் பேருந்து என்பதால், அப்பேருந்து இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே, அந்த பேருந்தை இரவு நேரத்தில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அன்னதானப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி கூறுகையில், அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள மன்னாதசாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மது அருந்துபவா்கள் காலி மதுப் புட்டிகளை கோயில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனா், இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை, சங்ககிரி காவல் துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியா் விளக்கி கூறினாா்.