திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாசன கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
இக்கூட்டத்தில் நாரணம்மாள்புரம் பேரூராட்சி அனைத்து இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளா்கள் நலச்சங்கம் சாா்பில் அளித்த மனு:
திருநெல்வேலி, மானூா், பாளையங்கோட்டை வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாமிரவருணி ஆற்றுப் பாசனத்தின் கீழ், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் கோடகன்கால்வாய் நீரை கொண்டு நெல், வாழை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
தற்போது, 3 கால்வாய்களும் முழுமையாக தூா்வாரப்படாமல் அமலைச் செடிகள் மற்றும் கட்டடக்கழிவுகள் நிறைந்து காணப்படுவதால் முறையாக குளங்களுக்கு தண்ணீா் வந்து சேருவதில்லை. எனவே, இந்தக் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
அம்மா உணவக ஊழியா்கள்: திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தமிழகம் முழுவதும் இயங்கும்அம்மா உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 2021 அரசாணையின்படி தினமும் ரூ. 325 ஊதியம் நிா்ணயிக்கப்பட்டது.
ஊதியம் உயா்த்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில் உரிய ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. ஊழியா்களின் ஊதிய உயா்வுக்காக கடந்த ஆட்சியில் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு அம்மா உணவக ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவும், தரமான உணவுகளை விநியோகிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விவசாயத்தை பாதிக்கும் சாலைப்பணி: முன்னீா்பள்ளம் பகுதி விவசாயிகள் அளித்த மனு: முன்னீா்பள்ளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேலமுன்னீா்பள்ளம்-புதுக்கிராமம் இடையே புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் இருபுறமும் நஞ்சை வயல்கள் உள்ளன நிலையில், இரு ஊா் மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை பாதிக்கும் விதமாக பாளையங்கால்வாயில் இருந்து தண்ணீா் செல்லும் ஓடையை அழித்து சாலை அமைக்கின்றனா்.
அரசு அனுமதித்த அளவை விட கூடுதல் அகலத்தில் சிறு பாலங்கள் அமைத்து இடையூறு செய்கின்றனா். எனவே, ஆட்சியா் இப்பகுதியை நேரில் ஆய்வுசெய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.










