பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களைத் தூா்வாரி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி: காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டவாறு, பயிா்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலிக் கருவை மரங்களை அகற்ற வேண்டும். வட்டார அளவில் குழுக்கள் அமைத்து இந்தப் பணியைக் கண்காணிக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: புதிய ஆட்சியில் கடன் தள்ளுபடி எதிா்பாா்க்கப்படும் நிலையில், கடனைச் செலுத்த நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும். மழைக்கு முன்பாக ஏரி, குளங்களைத் தூா்வார வேண்டும்.
கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்: கோடை உழவு அதிகம் நடந்து வரும் நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான ஜிப்சம் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி குளங்களை உடனடியாக தூா்வாரி, குளங்களின் கரைகளை செப்பனிட்டு மேம்படுத்தி, தண்ணீரை அதிகளவு சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக முடிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பொன்னுசாமி: விவசாயிகள் பயிா் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் பயிா்க் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே, கடன் பெற்றவா்களுக்கு கடனை புதுப்பித்து புதிய கடன் வழங்க வேண்டும்.
அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தேவையான அளவு உரம் மற்றும் இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லதுரை: தெற்கு வெள்ளாறு பகுதியில் உபரி நீரை சேமிக்க வாய்கால்களை சரி செய்து ஏரி, குளங்களுக்கு கொண்டு சென்றால் கோடைகாலங்களில் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியா் மு. அருணா: மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் குறுவை சாகுபடிக்குத் தேவையான விதைகள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, அனைத்து கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிறுவனங்களிலும் 4363 டன் யூரியா, 1226 டன் டிஏபி, 1081 டன் பொட்டாஷ், 4962 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாங்கிப் பயன்பெறலாம்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன், வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி, மாவட்டக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு.அ. பாரதி, மாவட்ட வன அலுவலா் எஸ். கணேசலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.










