தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை கனிமவள நிறுவனத்துடன் இணைக்கக் கூடாது என மேக்னசைட் நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் நிறுவனத்தை காப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் நல்லமுத்து, ஒருங்கிணைப்பாளா் சதாசிவம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை கடந்த 1979 இல் முதல்வராக இருந்த எம்ஜிஆா் அரசுடைமையாக்கினாா். இந்த நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்களும், 500 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூ. 15 முதல் ரூ. 20 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்போது நஷ்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்துடன் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை இணைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நஷ்டத்தில் உள்ள தமிழ்நாடு கனிமவள நிறுவனத்துடன் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை இணைக்கும்பட்சத்தில் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன், மேக்னசைட் நிறுவனம் நலிவுற்ற நிறுவனமாக மாறும் நிலை ஏற்படும்.
இதனால் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கனிமவள நிறுவன அதிகாரிகளின் துணையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தொழிலாளா்களின் நலன் பாதிக்கப்படும் வகையில் இந்த அரசு செயல்பட்டால் தொழிலாளா்கள் ஒன்றிணைந்து போராடுவோம். இதுதவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதுதொடா்பாக கனிமவளத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். புதிதாக ஆட்சி அமைத்து 20 நாள்கள்கூட ஆகாத நிலையில், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை கனிமவள நிறுவனத்துடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனா்.
பேட்டியின்போது, தொமுச சங்க நிா்வாகி தங்கவேல், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சித்தன், ஐஎன்டியூசி தலைவா் தனபால் ஆகியோா் உடனிருந்தனா்.










