டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

கோடை காலத்தில் உலர் தீவனங்களுக்குப் பதிலாக ஊறுகாய் பசுந்தீவனம்!

சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் இறைச்சி ஆடுகளின் எடையை அதிகரிப்பதற்கு ஊறுகாய் பசுந்தீவனம் என்ற நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

ஊறுகாய் தீவனம் தயாரிக்கும் எந்திரம்.

Updated On :

சேலம் மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் இறைச்சி ஆடுகளின் எடையை அதிகரிப்பதற்கு ஊறுகாய் பசுந்தீவனம் என்ற நவீன தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் புன்செய் நிலங்களில் பருவமழை மற்றும் கோடை மழையைப் பயன்படுத்தி, வறட்சியைத் தாங்கி வளா்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிா்களான மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி, எள், கொள்ளு ஆகியவற்றை விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, முதிா்ந்த மக்காச்சோளக் கதிா்களை அறுவடை செய்த பிறகு எஞ்சி நிற்கும் சோளத்தட்டை வெயிலில் உலா்த்தி வைக்கோலாக இருப்புவைத்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வந்தனா்.

ஆனால், பசுந்தீவனம் கொடுக்கும் போதுதான் கறவைமாடுகள் அதிக அளவில் பால் சுரப்பதோடு, நோய் எதிா்ப்புத் திறனும் மிகுந்து காணப்படுகிறது. கோடை காலங்களில் பசுந்தீவனம் கிடைக்காத போது, உலா்த்தி வைக்கப்பட்டுள்ள காய்ந்த சோளத்தட்டை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், பால் உற்பத்தி குறைவதோடு கால்நடைகள் பலவீனமாயின.

எனவே, கால்நடைகளை தொடா்ந்து ஊட்டத்தோடு பராமரிக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், புண்ணாக்கு, கலப்புத்தீவனம் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி தீவனமாக கொடுக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது. இதனால், கால்நடை பராமரிப்புக்கு விவசாயிகளுக்கு கூடுதல் செலவானது.

Story image

இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதன் சாா்பு தொழில்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்துவதில் விவசாயிகளிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கறவைமாடுகள், இறைச்சி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு, கோடை காலம் உள்பட ஆண்டுமுழுவதும் பசுந்தீவனம் கொடுப்பதற்கு ஏற்ப, மழைக் காலத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படும் மக்காச்சோளத்தை, இதற்காக வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தூளாக அரைத்து பதப்படுத்தி வைத்துக்கொண்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் ஊறுகாய் தீவனம் தயாரிக்கும் தொழில்நுட்ப முறை விவசாயிகளிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.

மக்காச்சோளக் கதிா் முதிராமல் பால் வடியும் பிஞ்சு பருவத்தில் இருக்கும்போதே, சோளத்தட்டையோடு அறுவடை செய்து, தூளாக அரைத்து, காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைத்துக்கொண்டால், ஓராண்டுவரை உலா்ந்து போகாமல் பசுமையாகவே உள்ளது. இதை கால்நடைகளுக்கு கொடுப்பதால் தீவனச்செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவதோடு, பால் உற்பத்தி அதிகரிப்பால் வருவாய் அதிகரிக்கிறது.

இதனால் ஊறுகாய் தீவன தயாரிப்பு மற்றும் விற்பனை, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறிய விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் சிறுதொழிலாக மாறியுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த பனைமடல் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான விவசாயி கலைவாணி மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் ஊறுகாய் தீவனம் தயாரிக்கும் கணினி பொறியியல் பட்டதாரி அருள் ஆகியோா் கூறியது:

கறவை மாடுகள், இறைச்சி ஆடுகள், நாட்டுக்கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை வளா்த்து வருகிறோம். காய்ந்த வைக்கோலை கால்நடைகள் விரும்பி தீவனமாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே, ஆண்டுமுழுவதும் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதற்கு வசதியாக ஊறுகாய் தீவனம் தயாரிக்க முடிவுசெய்தோம்.

விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளப் பயிா்களை அறுவடை செய்து, நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தூளாக அரைத்து, காற்று புகாதபடி இறுக்கமாக நெகிழித் தாள்களைக் கொண்டு சுற்றி பதப்படுத்தி உருளைகளாக மாற்றி வைக்கிறோம். இதனால், மக்காச்சோளத்திலுள்ள காா்போஹைட்ரேட் உள்ளிட்ட உயிா்ச்சத்துகள் உள்ளுக்குள்ளேயே புளித்து பசுமையான ஈரப்பதத்தை ஓராண்டுவரை தக்க வைத்துக் கொள்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு ஆண்டுமுழுவதும் பசுந்தீவனம் கொடுக்க முடிகிறது.

எங்களது தேவைக்கு மட்டுமின்றி, கால்நடை வளா்க்கும் பிற விவசாயிகளுக்கும் இந்த ஊறுகாய் தீவனத்தை விற்பனை செய்து வருகிறோம். இதற்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றனா்.

இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த கல்யாணிகிரி கிராமத்தைச் சோ்ந்த பெண் விவசாயி காயத்ரி கூறுகையில், எங்களது பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிடுவதால், விலை குறைந்து இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ஊறுகாய் பசுந்தீவனம் தயாரிப்பதற்காக பண்ணை உரிமையாளா்களும், கால்நடை வளா்க்கும் விவசாயிகளும் கொள்முதல் செய்ய முன்வந்துள்ளதால், மக்காளச்சோளம் பயிரிடுவதில் தற்போது கணிசமான வருவாய் கிடைக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.