சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

எல் நினோ! தமிழக மழைக்கு சாதகமா? சவாலா?

நடப்பு வடகிழக்குப் பருவமழையின் போக்கைத் தீர்மானிப்பதில் எல் நினோவின் பங்கு குறித்து...

El Niño impact

எல் நினோ: சாதகமா? சவாலா?

Updated On :

தமிழகத்தின் நீராதாரம், விவசாயம், குடிநீர் விநியோகம் எனப் பலவற்றைத் தீர்மானிக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தப் பருவம், தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் முடிவில், தமிழகத்தில் 16% மழைப் பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கப்போகிறது? தென்மேற்குப் பருவமழையைப் போலக் குறைந்துவிடுமா? அல்லது ஒருசில ஆண்டுகளில் பெய்ததைப் போன்ற பெருமழை பெய்யுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், 2026 அக்டோபர் மாத தொடக்கத்தில், மழை எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் பெய்துள்ளது.

அதேசமயத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நவம்பர் மாத வானிலை அறிக்கையின்படி, தென் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் மழைப்பொழிவு இயல்பைவிடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கான அறிகுறியாக, நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான கணக்கின்படி, தென் தீபகற்ப இந்தியாவில் அக்டோபர் 1 முதல் பதிவான வடகிழக்குப் பருவமழை அளவு, இயல்பைவிட 20 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இதில், தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் நவ.15-ஆம் தேதி வரை இயல்பைவிட 6 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. வலுவான எல் நினோ நிலவிவரும் சூழலில், தென் தீபகற்பப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்ற கணிப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் காலநிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், எல் நினோ தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், 2027 ஜனவரி-மார்ச் காலத்திலும் வலுவான அல்லது மிக வலுவான எல் நினோ நிலவுவதற்கு 83 சதவீதத்துக்கும் அதிகமான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், நடப்பு வடகிழக்குப் பருவமழையின் போக்கைத் தீர்மானிப்பதில் எல் நினோவின் பங்கு என்னவாக இருக்கும் என்பது வானிலை ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

வடகிழக்குப் பருவமழை ஏன் முக்கியம்?

தமிழகம், புதுச்சேரியின் ஆண்டு மழைப்பொழிவில் கணிசமான பங்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழையைவிட வடகிழக்குப் பருவமழையைச் சார்ந்தே தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்கள் உள்ளன.

வடகிழக்குப் பருவமழையின் போக்கு தமிழகத்தின் விவசாயத்திலும் நீர்வள மேலாண்மையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். மழை தாமதமாவது, நீண்ட இடைவெளி ஏற்படுவது அல்லது குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வது ஆகியவை பயிர்களின் வளர்ச்சியையும் வயல்களில் நீர் மேலாண்மையையும் பாதிக்கக்கூடும். மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளின் இருப்பு, பாசனத்துக்கான நீர்த்தேவை, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் திட்டமிட வேண்டியிருக்கும். மாறாக, குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து திடீரென அதிகரிப்பதுடன், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குதல், நகர்ப்புற வெள்ளம் போன்ற அபாயங்களும் உருவாகலாம். சென்னை போன்ற நகரங்களில் மழையின் மொத்த அளவை மட்டும் கணக்கில் கொள்ளாமல், ஒரு மணி நேரத்தில் பெய்யும் மழையின் தீவிரம், வடிகால் வசதிகள், நீர்நிலைகளின் நிலை ஆகியவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

எல் நினோ என்றால் என்ன? பருவமழை அளவை தீர்மானிக்கிறதா?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்வதால், அதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சியிலும் மாற்றங்கள் ஏற்படுவது எல் நினோ எனப்படுகிறது. இந்தியாவின் பருவமழையிலும் எல் நினோ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையின் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, எல் நினோவின் பலவீனத்தையோ, வலிமையையோ மட்டும் வைத்து முடிவுசெய்ய இயலாது.

கடந்த காலத்தில், எல் நினோ நிலவிய ஆண்டுகளில் தமிழகத்தில் மழைப்பொழிவு ஒரே மாதிரியாக இருக்கவில்லை. எனவே, எல் நினோ உருவானால் தமிழகத்தில் மழை கட்டாயம் குறையும் அல்லது அதிகரிக்கும் என்ற பொதுவான முடிவுக்கு வருவது சரியாக இருக்காது.

எல் நினோ மட்டுமே காரணமல்ல!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் போக்கைத் தீர்மானிப்பதில் எல் நினோவுடன் வேறு பல காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள், காற்றின் திசை மற்றும் வேகம், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை நிலவரம் ஆகியவை மழையின் அளவையும், மேகப் பரவலையும் மாற்றக்கூடும். இந்தியப் பெருங்கடல் இருமுனைக் குறியீடு உள்ளிட்ட கடல் - வளிமண்டலக் காரணிகளும் பருவமழையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தமிழகத்தின் மழைப்பொழிவு என்பது பல்வேறு இயற்கைக் காரணிகளின் கூட்டுவிளைவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பருவத்தில் எவ்வளவு மழை பெய்கிறது என்பது மட்டுமல்ல; எப்போது பெய்கிறது, எந்தப் பகுதியில் பெய்கிறது, எவ்வளவு தீவிரமாகப் பெய்கிறது, ஒவ்வொரு மழைப்பொழிவுக்கும் இடையிலான இடைவெளி எப்படி இருக்கிறது என்பவையே தமிழகத்தின் நீராதாரம், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் தாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கடந்த காலங்களில் வலுவான எல் நினோ நிலவிய சில ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக மழை பதிவாகியுள்ளதால், 2026-ஆம் ஆண்டிலும் மழைப்பொழிவு அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், எல் நினோ நிலவுவதால் மட்டுமே அதிக மழை பெய்யும் என உறுதியாகக் கூற முடியாது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். ஒரே எல் நினோ நிகழ்வுக் காலத்தில், ஓர் ஆண்டு அதீத மழையையும் வெள்ளத்தையும் சந்திக்கலாம்; அடுத்த ஆண்டு கடுமையான மழைப் பற்றாக்குறையையும் சந்திக்கலாம்.

1997-ஆம் ஆண்டு வலுவான எல் நினோ நிலவிய காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவானதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 2015-ஆம் ஆண்டில் சென்னையில் மிக அதிக மழை பெய்தது. அந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை, நகர்ப்புற வெள்ளம், பேரிடர் மேலாண்மை, நீர்நிலைகள் நிர்வாகம், மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஆகியவை குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியது. ஆனால், 2015-ல் ஏற்பட்ட அதிக மழைக்குப் பிறகு 2016-ல் தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழை சுமார் 62% பற்றாக்குறையாக இருந்தது. எல் நினோவின் தாக்கம் ஒவ்வோர் ஆண்டும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளின் பங்கு

தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையைத் தீர்மானிப்பதில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும் புயல்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய வானிலை மாற்றங்கள் தமிழக கடலோரத்தில் நிகழும்போது, சில நாள்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அவற்றின் நகர்வுப் பாதை மாறினால் மழைப்பொழிவு வேறு பகுதிகளுக்கு மாறக்கூடும்.

மேலும், இந்தியப் பெருங்கடலின் வானிலைச் சுழற்சிகளும் மழையின் தீவிரத்தையும் பரவலையும் பாதிக்கின்றன. எனவே, எல் நினோவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் மழைப்போக்கைக் கணிப்பது அறிவியல்பூர்வமான அணுகுமுறையாக இருக்காது என்பது வானிலை ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், எல் நினோ ஒரு வானிலை முன்னறிவிப்பு அல்ல, அது ஒரு காலநிலைக் குறியீடு மட்டுமே. எல் நினோவின் வலிமை, அது நீடிக்கும் காலம், இந்தியப் பெருங்கடலின் நிலை, வங்கக் கடலில் உருவாகும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே மழைப்பொழிவில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

வானிலை முன்னறிவிப்புகளின் முக்கியத்துவம்

பருவகால வானிலை முன்னறிவிப்பு என்பது அடுத்த சில மாதங்களில் மழை இயல்பைவிட அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது இயல்பான அளவிலோ இருக்கக்கூடும் என்பதை நிகழ்தகவு அடிப்படையில் தெரிவிப்பதாகும். ஆனால், அடுத்த 24 முதல் 72 மணி நேரத்தில் எந்த மாவட்டத்தில் மழை பெய்யும், எங்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்பதைக் குறிப்பது குறுகியகால வானிலை முன்னறிவிப்பாகும்.

பருவமழை குறைவாக இருக்கலாம் என்ற கணிப்பு இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், பருவமழை இயல்பாக இருக்கும் என்ற கணிப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இயல்பான மழை கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமல்ல. விவசாயிகள் விதைப்பு, நடவு, பயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றைத் திட்டமிடவும், நீர்வளத் துறையினர் நீர்த்தேக்கங்களை நிர்வகிக்கவும், பொதுமக்கள் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயங்களை எதிர்கொள்ளவும் சமீபத்திய வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.

தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் மழை எப்படி இருக்கும்?

நடப்பு வடகிழக்குப் பருவமழையில், ஒட்டுமொத்த மழை அளவைவிட, மாவட்டங்களுக்கு இடையிலான மழைப்பரவல் முக்கியத்துவம் பெறக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பருவகால மழையின் மொத்த அளவு, மழை பெய்யும் நாள்கள் மற்றும் அடுத்தடுத்த மழைக்கு இடையிலான கால இடைவெளிகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். தற்போதைய வடகிழக்குப் பருவமழையின்போது, குறிப்பிட்ட சில நாள்களில், குறிப்பிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

காவிரி டெல்டா

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடிக்குத் தேவையான மழையின் காலம், மழையின் தொடர்ச்சி, மழைப் பரவல் ஆகியவை முக்கியமானவை. மழையின் மொத்த அளவு இயல்பாக இருந்தாலும்கூட, மழைப்பொழிவுகளுக்கு இடையிலான மிகச்சிறிய அல்லது மிக நீண்ட இடைவெளிகள் விவசாயத் திட்டமிடலைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

தென் மாவட்டங்கள்

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான அல்லது இயல்பைவிட அதிகமான மழை பெய்யக்கூடும் என்ற கணிப்புகள் கவனிக்கத்தக்கவை. இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவில் மழை பெய்யும் என்று கூற முடியாது.

மேற்கு மாவட்டங்கள்

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பு, ஈரப்பதம், காற்றின் திசை, உள்ளூர் வளிமண்டலச் சுழற்சிகள் ஆகியவை மழையின் தீவிரத்தைத் தீர்மானிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை வெறும் கணிப்புகள் மட்டுமே, இவற்றை உறுதிப்படுத்தப்பட்ட மாவட்ட வாரியான முன்னறிவிப்புகளாகக் கருதக் கூடாது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளே இறுதியானவை. தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, எல் நினோ மட்டுமன்றி, மழையை நிர்ணயிக்கும் பிற காரணிகளின் தன்மையைப் பொறுத்தே மழையின் அளவு இருக்கும் என்பதே அறிவியல்ரீதியிலான உண்மை. மற்றவை எல்லாம் நிகழ்தகவு அடிப்படையிலான அனுமானங்களேயன்றி, அறிவியல்ரீதியிலான, நம்பகத்தன்மை வாய்ந்த கணிப்புகள் அல்ல.

எல் நினோவின் வலிமையும் வடகிழக்குப் பருவமழை பதிவுகளும் (1990 - 2026)

எல் நினோவின் வலிமையும் வடகிழக்குப் பருவமழை பதிவுகளும் (1990 - 2026)

வறட்சியைத் தாங்கும் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்

பெருமழை பெய்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் போன்று, போதிய மழையின்மை காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் விவசாயிகளுக்கு அதிகமாகத்தான் இருக்கும். எனவே, விவசாயிகள் நடப்பு சம்பா சாகுபடி காலத்தில் நீண்டகால நெல் ரகங்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கக்கூடிய குறுகிய கால நெல் ரகங்கள், கம்பு, தினை, உளுந்து, மணிலா போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். வறட்சி காரணமாக நீரைப் பயன்படுத்துவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வழக்கமான நீர்ப்பாசன முறைக்குப் பதிலாக சொட்டுநீர்ப் பாசனம், பயிர் மூடாக்கு செய்தல், நீர் ஆவியாதலைத் தடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதுபோல மழைக் காலங்களில் பண்ணைக் குட்டைகளில் நீரை சேகரித்து, அதை வறட்சிக் காலத்துக்குப் பயன்படுத்தும் வகையிலான பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கான ஆலோசனைகளை மாவட்ட வேளாண் துறை மேற்கொண்டு வருகிறது.

-பா.சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் (பொ), விழுப்புரம் மாவட்டம்.

தென்மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிகழாண்டும் தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழையைப் பெற வாய்ப்புள்ளது.

தென்கடலோரப் பகுதிகளான ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உவரி ஆகிய கடலோரப் பகுதிகளில் குறுகிய காலகட்டத்தில் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பாபநாசம், மணிமுத்தாறு, தென்காசி ஆகிய தென் தமிழக மலைப் பகுதிகளிலும் அதிபலத்த மழை பெய்யும். பிற வட மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பதிவானாலும் குறுகிய காலத்தில் பெருமழை பதிவாக வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை பெறும் மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 3,000 மி.மீ.க்கு மேல் இந்தப் பருவ காலத்தில் மழை பெறும்.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையானது டிசம்பர் மாதத்திலேயே விலகத் தொடங்கும். எல் நினோ காரணமாக 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குளிர் கால மழை இயல்பைவிட குறைவாகவே பதிவாக வாய்ப்புள்ளது.

-ராஜா, தனியார் வானிலை ஆய்வாளர், தென்காசி

2016 - 2026: தமிழக வடகிழக்குப் பருவமழைப் பதிவுகள்

2016 - 2026: தமிழக வடகிழக்குப் பருவமழைப் பதிவுகள்

எல் நினோவின் தாக்கங்கள்

வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை: சில பகுதிகளில் மழை குறைவதால் நீர்த்தேக்கங்கள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவற்றின் இருப்பு குறையலாம். குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பலத்த மழை மற்றும் வெள்ளம்: உலகின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யலாம். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, குடியிருப்புப் பகுதிகளில் நீர்த்தேக்கம் போன்ற அபாயங்கள் அதிகரிக்கலாம்.

1. விவசாய உற்பத்தி பாதிப்பு: மழை தாமதம், வறட்சி அல்லது அளவுக்கு அதிகமான மழை காரணமாக விதைப்பு, பயிர் வளர்ச்சி, அறுவடை ஆகியவை பாதிக்கப்படலாம். இதனால் உணவு உற்பத்தியும் விவசாயிகளின் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது.

2. வெப்பநிலை அதிகரிப்பு

எல் நினோ உலகளாவிய சராசரி வெப்பநிலையை உயர்த்தும் போக்கைக் கொண்டுள்ளது.

3. காட்டுத்தீ அபாயம்

வறட்சி மற்றும் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் தாவரங்கள் காய்ந்து, காட்டுத்தீ ஏற்படுவதற்கான சூழல் உருவாகலாம்.

4. கடல்வளம், மீன்வளம் பாதிப்பு

கடல் நீரின் வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துச் சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் மீன்களின் பரவல், இனப்பெருக்கம், மீன்பிடி வருவாய் ஆகியவற்றைப் பாதிக்கலாம்.

5. சுகாதாரப் பிரச்னைகள்

வெள்ளம், தேங்கிய நீர், வெப்ப அலைகள், குடிநீர்த் தரம் பாதிக்கப்படுதல் போன்றவற்றால் தொற்றுநோய் அபாயங்களும் வெப்பம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகல் அதிகரிக்கலாம்.

6. பொருளாதார பாதிப்புகள்

விவசாய இழப்பு, மீன்பிடி பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வெள்ளச் சேதம் மற்றும் பேரிடர் மீட்புச் செலவுகள் ஆகியவை உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

வளிமண்டல அமைப்புகள் அல்லாத முக்கிய காலநிலைக் காரணிகள்

1. எல் நினோ / லா நினா

பசிபிக் பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்தின் பரந்த அளவிலான மாற்றங்கள். இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றக்கூடும்.

2. இந்தியப் பெருங்கடல் இருமுனைக் குறியீடு

இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதி மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையிலான கடல் வெப்பநிலை வேறுபாடு. பருவமழையின் வலிமையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

3. கடல் மேற்பரப்பு வெப்பநிலை

கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு கிடைக்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பாதிக்கிறது.

4. காற்றின் திசை மற்றும் வேகம்

ஈரப்பதம் எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

மழையைத் தீர்மானிக்கும் முக்கிய அமைப்புகள்

1. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும் பகுதியில் காற்று ஒன்றுகூடி மேலே எழும்புகிறது. ஈரப்பதம் போதுமானதாக இருந்தால் மேகங்கள் உருவாகி மழை பெய்யலாம். வங்கக்கடலில் உருவாகும் இத்தகைய அமைப்புகள் தமிழக மழைக்கு முக்கியமானவை.

2. புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

இவை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைவிட, வலுவான காற்றுச் சுழற்சிகளைக் கொண்ட அமைப்புகள். இவை நகரும் பாதை மற்றும் வேகத்தைப் பொறுத்து கனமழை, மிகக் கனமழை, வெள்ளம் போன்றவை ஏற்படலாம்.

3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வளிமண்டலத்தின் குறிப்பிட்ட உயரத்தில் உருவாகும் சுழற்சி, காற்று மேலெழுவதற்கும் மேகங்கள் உருவாவதற்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். இது சில நேரங்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

4. காற்று ஒன்றுகூடும் மண்டலம்

வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் காற்று சந்திக்கும் பகுதியில் காற்று மேலெழும்புகிறது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இடியுடன் கூடிய மழையும் பரவலான மழையும் உருவாகலாம்.

5. காற்றழுத்தத் தாழ்வுப் பள்ளம்

நீண்ட பகுதியாக நீளும் தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் இது. அதன் அமைவிடம், நகர்வு, அதனுடன் இணையும் காற்றுச் சுழற்சிகள் ஆகியவற்றைப் பொறுத்து மழையின் பரவல் மாறும். இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையில் காற்றழுத்தத் தாழ்வுப் பள்ளம் முக்கியமான பங்கை வகிக்கிறது.

6. வெப்பச்சலன மேகங்கள்

தரைப்பரப்பு வெப்பமடைவதால் ஈரமான காற்று வேகமாக மேலெழுந்து, உயரமான மழை மேகங்கள் உருவாகலாம். இவை இடியுடன் கூடிய கனமழையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பிட்ட இடங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ய இது ஒரு காரணமாகும்.

7. கிழக்கத்திய அலைகள்

வெப்பமண்டலப் பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்காக நகரும் வளிமண்டல அலைகள் இவை. ஈரப்பதம் மற்றும் காற்று மேலெழும் செயல்பாட்டை மாற்றி, வங்கக்கடல் மற்றும் தென்னிந்தியாவில் மழை உருவாக இவையும் காரணமாகலாம்.

8. மேடன்–ஜூலியன் அலைவு

வெப்பமண்டலத்தில் மேகங்கள், காற்று, மழை ஆகியவற்றில் ஏற்படும் பெரிய அளவிலான மாற்றம். இதன் சுழற்சி பொதுவாக 30-60 நாள்கள் நீடிக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் இதன் சாதகமான கட்டம் நிலவும்போது மழைச் செயல்பாடு அதிகரிக்கலாம்; மற்ற கட்டங்களில் குறையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.