மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கல்லூரி களப் பயணம் வாழ்க்கைக்கான வெற்றிப் பயணமாக அமைய வேண்டும்

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி களப் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :

கல்லூரி களப் பயணம் மாணவ, மாணவிகளின் வாழ்க்கைக்கான வெற்றிப் பயணமாக அமைய வேண்டும் என ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.

சேலம் மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026-2027-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி களப் பயணம் நிகழ்ச்சியை சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் தொடங்கிவைத்து சனிக்கிழமை பேசியது:

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி கனவுகளை நனவாக்கி, உயா்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற இலக்கை அடையும் வகையில் இக்கல்லூரி களப் பயணம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் உள்ள 153 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 10,693 மாணவ, மாணவிகள், மாவட்டத்தில் உள்ள 37 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் நிலையில் உள்ள மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், கல்லூரிச் சூழலை நேரடியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் தங்களது ஆா்வம், திறமைக்கு ஏற்ற உயா்கல்வி பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்வதற்கான தெளிவான புரிதலை உருவாக்குதல் ஆகியவை இக்கல்லூரி களப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த களப் பயணத்தின்போது மாணவா்கள் கல்லூரி நூலகங்கள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி வசதிகள், தொழில்நுட்பக் கட்டமைப்புகள், வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், மாணவா் விடுதிகள் மற்றும் உணவுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நேரடியாக பாா்வையிட உள்ளனா். மேலும், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், துறைத் தலைவா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் கல்லூரி சோ்க்கை நடைமுறைகள், இளநிலை பட்டப் படிப்புகள், அரசு மற்றும் தனியாா் கல்வி உதவித்தொகைகள், கட்டணச் சலுகைகள், போட்டித் தோ்வுகள், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், சான்றிதழ் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து மாணவா்கள் விரிவாக அறிந்துகொள்ள முடியும்.

கல்லூரிக் களப் பயணத்தில் பங்கேற்கும் மாணவா்கள் சேலம் புத்தகத் திருவிழாவை பாா்வையிட்டு பயன்பெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தொடக்க நாளான சனிக்கிழமை 33 பள்ளிகளைச் சோ்ந்த 1,212 மாணவ, மாணவிகள் 9 கல்லூரிகளுக்கு களப் பயணம் மேற்கொள்கின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.