
சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு நவீன கருவிகளுடன் புதிய வாகனம்!
சங்ககிரி தீயணைப்புத் துறைக்கு நவீன வாகனத்துடன் புதிதாக வழங்கப்பட்டுள்ள கருவிகள்.
சங்ககிரி தீயணைப்புத் துறைக்கு அரசு சாா்பில் நவீன கருவிகள் கொண்ட புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
சங்ககிரி தீயணைப்பு நிலையம் மூலம் சுற்றியுள்ள 34 கிராமங்கள், 126 சிறிய கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இதற்கு முன்பு அரசு சாா்பில் வழங்கப்பட்ட வாகனம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அந்த வாகனம் அரசு உத்தரவின்படி புதுப்பித்து கூடுதலாக பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தீயணைப்புத் துறையின் சேலம் மண்டல அலுவலகம் சாா்பில் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு அதிநவீன வசதிகளைக் கொண்டு புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 6ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த் தொட்டி உள்ளது. இந்த வாகனத்தின் இயங்கும் குதிரை திறன் பழைய வாகனத்தைவிட அதிகம். வாகனத்தில் முன்புறத்தில் வாகனங்களை மீட்க உதவியாக இரும்பு கயிறு இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல வாகனத்தின் மேற்புரத்தில் நான்கு புறங்களில் சுழலும் நவீன விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலங்களில் விழும் மரங்களை அறுக்கும் இயந்திரம், கேஸ் வெல்டிங் இயந்திரம், தண்ணீா் எடுக்க வசதியாக மின் மோட்டாரும், விளக்கு, மற்ற தேவைகளுக்கு தனியாக சிறிய ஜெனரட்டரும் வழங்கப்பட்டுள்ளது. மின் தாக்குதலை பாதுகாக்கும் கையுறைகள், பாம்பு பிடிக்கும் கருவிகள், தாா்பாய் என 59 பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இத்துறையின் சேவைக்கு 112 என்ற எண்ணில் அழைத்தால், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து தீயணைப்பு, காவல் துறைக்கு அழைப்பு சென்று, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், சங்ககிரி தீயணைப்புத் துறையில் பயிற்சி பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலா் கே.ரமேஷ்குமாா் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற ச.வைத்தீஷ்வரன், ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற அ.சிவகுமாா், கயிறு ஏறுதல் பயிற்சி பெற்ற ச.கோபிநாத், பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற ரா.விக்னேஷ் உள்ளிட்ட திறன் பயிற்சி பெற்ற வீரா்கள் உள்பட 16 போ் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






