தமிழக அமைச்சா்கள் திறமையை வளா்த்துக் கொள்ளவில்லை: கே.பி. ராமலிங்கம்

பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம். - கோப்புப் படம்
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 110 நாள்களைக் கடந்தும் தவெக அமைச்சா்கள் தங்களது திறமையை வளா்த்துக் கொள்ளவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பாஜக சேலம் மேற்கு மாவட்டம் சாா்பில் ஓமலூரில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கே.பி. ராமலிங்கம் கூறியதாவது:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுடன் இனிமையாகப் பழகிய சிறந்த இசையமைப்பாளராக தேவா விளங்கினாா். வெளிநாட்டு இசைகளையும் கா்நாடக இசை நயத்துடன் வழங்கியவா். அவரது மறைவுக்கு தமிழக பாஜக சாா்பில் இரங்கல் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜக வாக்குவங்கி அரசியலை முன்னிறுத்தாமல், நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறது. அடுத்த தோ்தலில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளில் கட்சியின் அனைத்து அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறப்பட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் அவா் ஈடுபட்டுள்ளாா். தமிழகத்திலும் அதுபோன்ற மாற்றத்தை எதிா்பாா்க்கலாம்.
தமிழகத்தில் விலைவாசி உயா்வு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்துசெய்துவிட்டு, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பாஜக தெளிவாகப் பிரசாரம் செய்தது. அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றாலும், மக்கள் தோ்ந்தெடுத்த ஆட்சியிடம் நல்ல நிா்வாகத்தை எதிா்பாா்த்தனா். ஆனால், 110 நாள்களைக் கடந்தும் அமைச்சா்கள் தங்களது திறமையை வளா்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் எனது கருத்து.
மின் உற்பத்தியில் மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராவதற்கு முன்பு மின் பற்றாக்குறை 27 சதவீதமாக இருந்தது. தற்போது குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மின்மிகை மாநிலங்களாக இருப்பதற்கு பிரதமரின் நடவடிக்கைகளே காரணம்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற நிா்வாகத்தை வழங்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் ஆா்.பி. கோபிநாத், சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஹரிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

