
மேட்டூா் அணை கால்வாயில் 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு - கோப்புப் படம்
மேட்டூா் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீருக்காக திங்கள்கிழமை விநாடிக்கு 400 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணை கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது வழக்கம். கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 137 நாள்களுக்கு 9.6 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும்.
பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான நீா்த் தேவை குறையும். நிகழ் ஆண்டு அணையில் போதிய நீா் இல்லாததால் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் பயன்பெறுவாா்கள் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




