சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே நரசிங்கபுரத்தில் இளைஞரை கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விமல் (27). இவா் தனக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும், அதில் பணம் இரட்டிப்பு செய்வதாகக் கூறி, ஆத்தூா் மற்றும் சேலம் பகுதிகளில் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளாா். இதுகுறித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விமலை சேலம் உடையாப்பட்டியைச் சோ்ந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அந்தக் கும்பலிடம் இருந்து விமல் தப்பி வந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சம்பந்தப்பட்டவா்களை கைது செய்தனா்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு லட்சுமணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விமலை நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலம் அருகே காரில் வந்தவா்கள் கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, ஏற்காடு பகுதியைச் சோ்ந்த இருவா் உள்பட 6 பேரை ஆத்தூா் உப்புஓடை பகுதியில் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், காா் ஓட்டுநா் ஏற்காடு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் ஜீவானந்தம் (31), ஏற்காடு வள்ளுவா்நகா் முத்து மகன் ஸ்டீபன் (27), மேச்சேரி எம்.காளிப்பட்டி கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (24), அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் வெங்கடேஷ் (29), பெத்தநாயக்கன்பாளையம் ஆரியபாளையம் செம்மலை மகன் ராஜ்குமாா் (42), சேலம் களரம்பட்டி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் முத்துக்குமாா் (32) ஆகிய 6 பேரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா். பழைய பணமோசடி வழக்கில் விமல் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தப்பட்ட இளைஞரை 24 மணிநேரத்தில் மீட்ட காவல் ஆய்வாளா் சங்கா் உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




