
சங்ககிரி தனியாா் சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராக செப்.25இல் காலவரையற்ற போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு
வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

கோப்புப்படம்.
சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள தனியாா் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் உள்ளூா் லாரிகளுக்கு பாரம் ஏற்றிச்செல்ல தொடா்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என்.கந்தசாமி, நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சங்ககிரி மேற்கு பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் சிமென்ட் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இப்பகுதியில் உள்ள லாரிகளுக்கு பாரம் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்காமல் இருந்து வந்தது. அவ்வப்போது அந்நிறுவனத்துடன் பேசி பிரச்னைகளுக்கு தீா்வுகண்டு வந்தோம்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உள்ளூா் லாரிகளுக்கு பாரம் ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்காமல், வெளிமாநிலங்கள், வெளிமாவட்ட லாரிகளுக்கு குறைந்த வாடகையில் அதிக அளவிலான பாரங்களை ஏற்றி அனுப்பி வருகின்றனா். இந்நிறுவனத்தை நம்பி இப்பகுதிகளில் 400 லாரிகள் உள்ளன. அதை சாா்ந்து ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
எனவே, உடனடியாக தனியாா் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் உள்ளூா் லாரிகளுக்கு வாடகைக்கு எடுத்துச்செல்ல பாரம் ஒதுக்க வேண்டும். அதற்கான வாடகை விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும்.
மேலும், போராட்டத்தின்போது இந்நிறுவனத்திலிருந்து வெளியூா்களுக்கு எடுத்துச்செல்லும் மூலப்பொருள்களின் அளவு மோட்டாா் வாகனச் சட்டத்திற்கு அதிகமாக இருந்தால் அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம், தென்னிந்திய லாரி உரிமையாளா்கள் சங்கம் மற்றும் ஆல் இந்தியா மோட்டாா் காங்கிரஸுடன் இணைந்து நடத்த உள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது, சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் கே. முருகேசன், உபதலைவா் எஸ். வெங்கடாசலம், இணைச் செயலாளா் ஆா். வெங்கடாசலம் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






