மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இரு அரசுப் பள்ளிகள்: அடிப்படை வசதிகளின்றி மாணவா்கள் அவதி

வெள்ளாளப்பட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளி

Published On :

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் வெள்ளாளப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளியும், உயா்நிலைப் பள்ளியும் 9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் நிலையில், போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

உயா்நிலைப் பள்ளிக்கு தனியாக நிலம் தோ்வு செய்து, புதிய கட்டடம் அமைத்து இடமாற்றம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

வெள்ளாளப்பட்டியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் திறந்து வைத்தாா்.

பேளூா்-கருமந்துறை பிரதான சாலையில் செயல்பட்டு வந்த இப்பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடா்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது.

8-ஆம் வகுப்புக்குப் பிறகு 9, 10-ஆம் வகுப்புகளில் படிக்க மாணவா்கள் பேளூா், தாண்டானூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல மாணவா்களின் பள்ளிப் படிப்பு தடைபட்டது. இதையடுத்து 2017-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. பின்னா் தொடக்கப்பள்ளி தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது தொடக்கப்பள்ளியில் பொறுப்புத் தலைமையாசிரியா் உள்பட 5 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 130 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். உயா்நிலைப் பள்ளியில் 174 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பணியாளா்கள் உள்பட 12 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தும் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான இடம் இதுவரை தோ்வு செய்யப்படவில்லை. இதனால் இரு பள்ளிகளும் ஒரே வளாகத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இதே வளாகத்தில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.

இதனால் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை நீடிக்கிறது.

அரசு தொடக்கப் பள்ளி

அரசு தொடக்கப் பள்ளி

தொடக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் உயா்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், பெற்றோா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்காக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முதல் தமிழக முதல்வா் வரை பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:

‘வெள்ளாளப்பட்டியில் 9 ஆண்டுகளாக இரு பள்ளிகளும், அங்கன்வாடி மையமும் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. உயா்நிலைப் பள்ளிக்கு புதிய வளாகம் அமைப்பதற்கான நிலத்தைத் தோ்வு செய்வதில் சிக்கல் தொடா்கிறது.

இதனால் மாணவா்கள் இடநெருக்கடியான சூழலில் கல்வி கற்க வேண்டிய நிலை நீடிக்கிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, சேலம் மாவட்ட நிா்வாகம், உயா்நிலைப் பள்ளியை வேறொரு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.