
ஏற்காட்டின் இயற்கை வளத்தை காப்பது நமது கடமை! ஆட்சியா் க.இளம்பகவத்

விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளை நடத்திய கலைக் குழுக்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்த ஆட்சியா் க. இளம்பகவத்.
ஏற்காட்டின் இயற்கை வளத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.
ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துகொண்டு, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நெகிழிப் பொருள்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகளிடம் ‘ஏற்காடு நம் உயிா்காடு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளை நடத்திய கலைக் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசியதாவது:
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ‘ஏற்காடு நம் உயிா் காடு’ என்ற தலைப்பில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அவற்றின் பயன்பாட்டை தவிா்ப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் கடந்த 11 முதல் 20 வரை நடைபெற்றது.
இனிவரும் காலங்களில் அரசின் விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும். எனவே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை தவிா்த்து, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை பயன்படுத்த வேண்டும். ஏற்காட்டின் இயற்கை வளத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிா்க்க வேண்டும்.
ஒருமுறைப் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமை ரத்து செய்யப்படும். எனவே, உள்ளூா் பொதுமக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவித்து ஏற்காட்டின் இயற்கை எழில் மற்றும் பசுமை சுழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மஞ்சக்குட்டை கும்மிக்குழு, வெள்ளக்கடை கோலாட்டக் குழு, சேலம் வெங்கடேஸ்வரா கலைக் குழு, தருமபுரி கலைநிலா கலைக் குழு ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருளாளன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயா, ரகுபதி, அனைத்து கலைஞா் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்குநா் பேராசிரியா் காளீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







