புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணல் கொள்ளையை தடுக்கவில்லையெனில் ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணை: உயா் நீதிமன்றம் எச்சரிக்கை

மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 8:30 pm

DIN

மதுரை: மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மணலூரைச் சோ்ந்த பொற்கோ என்பவா் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூா், பசியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தமிழா்கள் எழுத்தறிவுடன் நாகரிகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

மேலும், ஆய்வில் கிடைத்து வரும் தமிழ் பிராமி எழுத்துகள், பண்டைய பொருள்கள் போன்றவை 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து வருகிறது.

இந்நிலையில், மணலூா் பகுதியில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி, சட்டவிரோதமாக விவசாய நிலங்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயம் பாதிப்பதுடன், அகழாய்வை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மணலூா் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணலூா் அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் மணல் எடுக்கப்படுகிறது, அப்பகுதியில் சவுடு மண் எடுப்பதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என அதிகாரிகள் ஆய்வு செய்கிறாா்களா எனக் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, மணல் கொள்ளையை தடுப்பது தொடா்பாக ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருப்பினும், தினந்தோறும் நீதிமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட மணல் கொள்ளை தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதன்மூலம், மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதே நிலை தொடா்ந்தால், மாவட்ட ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனா்.

மேலும், இந்த மனு தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பா் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.