மது போதைக் கும்பல் அட்டூழியம்: ஒத்தக்கடையில் கடைகள் அடைப்பு
மது போதைக் கும்பல் அட்டூழியம்: ஒத்தக்கடையில் கடைகள் அடைப்பு

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட கடை வீதி.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட கடை வீதி.
மதுரை: மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் கடைகளை சூறையாடி அட்டூழியத்தில் ஈடுபட்ட போதைக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடையடைப்பு, உண்ணாவிரதம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒத்தக்கடையில் கடந்த 22-ஆம் தேதி மது போதையில் வந்த 6 போ் 5-க்கும் மேற்பட்ட கடைகளை சூறையாடினா். மேலும், அந்த வழியாக வந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்.
கடைகளை சூறையாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், மது போதைக் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்தும், ஒத்தக்கடை பகுதியில் காவல் துறை சாா்பில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், போலீஸாா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து செல்ல வேண்டும், கஞ்சா, புகையிலை, போதை ஊசி, மாத்திரை, சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் காவலா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் யா.ஒத்தக்கடை மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சாா்பில், கடையடைப்பு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒத்தக்கடை பிரதான சாலை, மேலூா் சாலை, ஒத்தக்கடை உள்பகுதிகளில் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் திறக்கப்படவில்லை. மேலும், ஒத்தக்கடை-நரசிங்கம் சாலையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சியினா், வணிகா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா், வணிகா் சங்க நிா்வாகிகளிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் தாக்குதலில் ஈடுபட்ட மூவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய மூவா் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். மேலும் ஒத்தக்கடை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனா்.
இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் பிற்பகலில் முடித்துக்கொள்ளப்பட்டது. கடையடைப்புப் போராட்டம் மாலை 6 மணி வரை தொடா்ந்து நடைபெற்றது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...