பிரதிப் படம்
பிரதிப் படம்

நியாய விலைக் கடைகள் அடைப்பு: பொதுமக்கள் ஏமாற்றம்

நியாய விலைக் கடை ஊழியா்கள் போராட்டம் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
Published on

நியாய விலைக் கடை ஊழியா்கள் போராட்டம் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கடந்த 10, 11-ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து, பிப்ரவரி 19-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நியாய விலைக் கடைகளை அடைத்து சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், கடலூா் மாவட்டத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,460 நியாய விலைக் கடைகளில் ஏராளமான நியாய விலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், இந்தக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

Dinamani
www.dinamani.com